வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்: தேரை வடம்பிடித்து இழுத்த பள்ளி மாணவர்கள்

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்: தேரை வடம்பிடித்து இழுத்த பள்ளி மாணவர்கள்
Updated on
1 min read

புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை வடம் பிடித்து அமைச்சர் தொடங்கி வைக்க பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் இழுத்துச் சென்றனர்.

புதுவை வில்லியனூரில் சோழர் காலத்து கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்டம் விமர்சையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஆடிப்பூர தேரோட்டம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிவபெருமானுக்கு ஹோமம், வாஸ்து சாந்தி, ஆகியவை நடைபெற்றது.

பின்னர் ஒவ்வொரு நாளும் நாக வாகனம், இந்திர விமானம், நந்தி சேவை என பல்வேறு அலங்காரத்தில் சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருக்காமேஸ்வரர் - கோகிலாம்பிகை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதனிடையே, திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று (ஆக.13) ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேரினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் ரவிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயில் பிரகாரத்தை அடைந்தது.

திருக்காஞ்சி கெங்கை வராக நதீஸ்வரர் தேரோட்டம்:

இதேபோல் திருக்காஞ்சி கெங்கை வராக நதீஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்: தேரை வடம்பிடித்து இழுத்த பள்ளி மாணவர்கள்
கும்பகோணம்: தண்டவாளத்தை கடக்க முயன்றவரை காப்பாற்ற முயற்சி; கேட் கீப்பர் உள்பட இருவர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in