கொலை நிகழ்ந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி. உள்படம் (கண்ணன்)
சென்னை: பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாகத் தீர்த்துக்கட்டிய 5 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45). அதிமுகவில் வட்டச் செயலாளராக இருந்த இவர், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக-வில் இணைந்தார்.
மேலும், ஐ.டி. நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கண்ணன் நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில் வண்ணான்துறை ராமசாமி அவென்யூ, எல்லையம்மன் கோவில் தெருவில் தனது நண்பர்கள் 4 பேருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென கண்ணனை அரிவாளால் வெட்டியது.
அதிர்ச்சியடைந்த கண்ணன் உயிர் தப்புவதற்காக ஓட்டம் பிடித்தார். ஆனால், சிறிது தூரத்திலேயே நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்தக் கும்பலைச் சேர்ந்த 3 பேர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதனை பார்த்த கண்ணனின் நண்பர்கள், அவரை காப்பாற்றுவதற்காக சாலையில் கிடந்த கற்களை எடுத்து கொலை கும்பல் மீது வீசினர். கொலையாளிகளில் ஆயுதங்களுடன் மிரட்டியதால் அவர்கள் தப்பிச் சென்றனர். கண்ணனை சரமாரியாக வெட்டிய கொலையாளிகள் தாங்கள் வந்த பைக்குகளில் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அடையாறு துணை ஆணையர், உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கண்ணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொலையாளிகள் அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த பரணி (20), கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்த ராகேஷ் (20), திருவான்மியூர் பெரியார் நகரைச் சேர்ந்த நரேஷ் (20), இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (20), கோட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பரணி, ராகேஷ், ஹரி, மணி, நரேஷ்.
கைதான பரணியின் பெரியப்பா சிவா கடந்த 2009-ம் ஆண்டு கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பரணியின் தந்தை வேலுவும் கடந்த 2016-ம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தந்தை மற்றும் பெரியப்பாவின் கொலைக்கு பழிக்குப் பழியாக கண்ணனை பரணி மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர்.
அதிகாரிகள் மாற்றம்
தவெக நிர்வாகி கண்ணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையைத் தடுக்கத் தவறியதாகவும், கவனக்குறைவாகப் பணியாற்றியதற்காகவும் அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், சாஸ்திரி நகர் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரோகிணி ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.