கரூர்: கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்றதாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கரூர்- கோவை சாலை என்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் மகுடபதி மனைவி பிரியா. இவர், ஆக.16-ம் தேதி ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வருந்தியாபாளையத்தில் உள்ள பெற்றோரை பார்ப்பதற்காக கரூரில் இருந்து ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
வேட்டமங்கலம் தனியார் பள்ளி அருகே சென்றபோது, அவரின் பின்னால் பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், பிரியாவின் சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதில், சுதாரித்துக் கொண்ட பிரியா, வாகனத்தை இடதுபுறமாக திருப்பியதால் சங்கிலி அறுபடாமல் தப்பியது. இதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதுகுறித்து பிரியா அளித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது,
தவெக புகழூர் நகரச் செயலாளரான, மூளிமங்கலம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் சங்கிலியை பறிக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.