பல்லாவரம்: பல்லாவரம் திருநீர்மலை சாலையில் மதுபானக்கடை அருகே பணம் கேட்டு வந்த 3 திருநங்கைகள், ஒருவரிடம் இருந்து ரூ.14 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மெருலால் யாதவ் (42). நேற்று முன் தினம் மாலை திருநீர்மலை சாலையில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத 3 திருநங்கைகள் அவரை வழிமறித்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ரூ.10 கொடுக்கலாம் என்று மெருலால் யாதவ் தன் பையை திறந்தார்.
அப்போது பையில் இருந்து ரூ.10 எடுக்க முயன்றபோது, அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல 3 திருநங்கைகளும் சேர்ந்து செயல்பட்டனர். மின்னல் வேகத்தில் மெருலால் யாதவ் பையில் இருந்த ரூ.14 ஆயிரத்தை அப்படியே பறித்து கொண்டனர். “என்ன நடக்கிறது” என்று அவர் சுதாரிப்பதற்குள், 3 பேரும் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த மெருலால் யாதவ் கத்தியும் பயனில்லை. தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் இழந்து நின்ற மெருலால் யாதவ், உடனடியாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட பல்லாவரம் போலீஸார், கொள்ளை வழக்கு பதிவு செய்துள்ளனர். பணத்தை பறித்துச் சென்ற 3 திருநங்கைகளையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். திருநீர்மலை சாலை மற்றும் மதுபானக் கடை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.