சென்னை: டிராவல்ஸ் உரிமையாளரைத் தாக்கி ‘ஜிபே’ மூலம் பணம் பறித்த திருநங்கைகள் இருவர் கைது செய்யப்பட்டனர். மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (30). டிராவல்ஸ் நிறுவனம் வைத்து அவரே கார் ஓட்டி வருகிறார்.
அந்த வகையில், செங்கல்பட்டில் உள்ள கார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை தினமும் அழைத்துச் சென்று வருகிறார். கடந்த 19-ம் தேதி இரவு வழக்கம்போல் செங்கல்பட்டிலிருந்து ஊழியர்களை அழைத்துக் கொண்டு அம்பத்தூரில் இறக்கிவிட்டு, மீண்டும் செங்கல்பட்டு செல்வதற்காக 20-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் புறப்பட்டார்.
மதுரவாயல் மேம்பாலம் அருகே சென்றபோது தூக்கம் வந்ததால் சிறிதுநேரம் காரை மதுரவாயல் மேம்பாலம் கீழே நிறுத்திவிட்டு காரிலேயே தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் பணம் கேட்டு மிரட்டினர். ஜெகன் பணமில்லை என தெரிவித்ததால் அவரை சரமாரியாகத் தாக்கினர்.
தொடர்ந்து பணம் தரவில்லை என்றால் கார் கண்ணாடியை உடைத்துவிடுவதாக மிரட்டி, ஜெகனின் செல்போனை பறித்து, ஜிபே மூலம் ரூ.11 ஆயிரம் பறித்துவிட்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த ஜெகன், இதுதொடர்பாக வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து பணம் பறித்து தப்பிய திருநங்கைகளான பெரம்பூரைச் சேர்ந்த கயல்விழி (28), அதே பகுதியைச் சேர்ந்த அனுஷிகா (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.