

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை கிண்டி அஞ்சலகம் அருகே சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மொத்தம் 72 இடங்களில் போராட்டம் நடந்தது. சென்னை கிண்டியில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். அதேபோல் அண்ணா சாலையில் அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார்.
இதுதவிர மின்ட், அம்பத்தூர் பகுதிகளிலும் மறியல் நடைபெற்றது. போராட்டங்களில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுதலை செய்தனர்.
அந்த வகையில் சென்னையில் நடந்த போராட்டங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் குறித்து பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் பாஜக அரசு, பின்பற்றக்கூடிய பாசிச, தாராளமய பொருளாதார கொள்கையின் வெளிப்பாடாக இந்த தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை அமலாக்கியுள்ளது.
ஒரு தொழிலாளிக்கு ஒரு ஆண்டுதான் வேலை என்று சொன்னால் நிச்சயம் அந்த தொழிலாளியின் குடும்பம் முன்னேறாது. இவையெல்லாம் தொழிலாளர் விரோத செயல்களாகும். எனவே இச்சட்ட தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், விவசாயிகள் கூட்டமைப்பும் இணைந்து வரும் பிப்ரவரி 12-ம் தேதி மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டாக முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.