அம்பத்தூர்: இரண்டு கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 11-ம் தேதி இரவு, அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஐஸ்வர்ய கணபதி கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், 7.150 கிலோ வெள்ளிப் பொருட்கள், உண்டியல் பணத்தைத் திருடிச் சென்றனர்.
மேலும், அதே பகுதியில் உள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோயிலில் கடந்த அக்.31-ம் தேதி இரவு கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், 6 தங்கத் தாலிகள், ஒரு வெள்ளி சூலம், சுமார் முக்கால் கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள், உண்டியல் பணத்தைத் திருடிச் சென்றனர். இரு கொள்ளைகள் தொடர்பாகவும் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
திருட்டில் ஈடுபட்ட சிவலிங்கம் (37), சந்தோஷ்குமார் (42), மற்றும் வெள்ளி ஆபரணங்களை வாங்கிய வியாபாரியான சஞ்சய் பாண்டுராங்கா (39) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், ஒரு கிராம் எடையுள்ள 2 தங்கத் தாலிகள், 7.115 கிலோ வெள்ளிப்பொருட்கள், ஒரு இருசக்கர வாகனம் வெள்ளிப் பொருட்களை உருக்கும் இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.