தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கீதாஜீவன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அருணாச்சலத்தின் உறவினர்கள். படம்: என்.ராஜேஷ் (உள்படம்: உயிரிழந்த அருணாச்சலம்)
தூத்துக்குடி: மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர் தூத்துக்குடியில் நேற்று உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (24). இவர், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 17-ம் தேதி தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்பாகம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த அவர், 18-ம் தேதி அதிகாலையில் திடீரென மயங்கி விழுந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருணாச்சலத்தை சேர்த்தனர். கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
‘காவல் துறையினர் தாக்கியதால்தான் அருணாச்சலம் இறந்துள்ளார். சம்பந்தப்பட்டபோலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தி, தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் கலந்து கொண்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அருணாச்சலம் உடலை முறையாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, அவரது உறவினர்கள் வலியுறுத்தினர். இதற்கு போலீஸார் சம்மதித்தனர். இதையடுத்து,சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நாகர்கோவிலை தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் உட்பட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைக்கு தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்.
நாளை பணிக்கு திரும்பிய பிறகாவது, இந்தக் காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, போலீஸார் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.