திருபுவனம் பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீஸார். படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர்: திருபுவனம் பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் 2019-ல் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தைக் கண்டித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலர் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் செல்வதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவுக்கு (ஐ.பி.) ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ஐ.பி. மாநில சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்ஐயு) அதிகாரிகள் மற்றும் போலீஸார் நேற்று கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது, சந்தேகப்படும் வகையில் சென்ற காரை சுற்றி வளைத்த போலீஸார், அதிலிருந்த 4 பேரை பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலையில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு மாங்குடி பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த புர்ஹானுதின் (33), திருவிடைமருதூர் திருமங்கலம்குடியைச் சேர்ந்த முகமது நபீல் ஹசன் (34) என்பது தெரியவந்தது. காரை ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அசநெல்லி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் (30) ஓட்டிவந்தார். இவர் எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர். இவருடன் வந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முகமது இம்ரான் (33) என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, வேலூர் எஸ்.பி. மயில்வாகனன் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டார். பின்னர், நால்வரும் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வந்த காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.