நீதிபதி சுவாமிநாதனை நீக்கக் கோரி மனு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 120 பேர் சேர்ந்து தீர்மானம்

நீதிபதி சுவாமிநாதனை நீக்கக் கோரி மனு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 120 பேர் சேர்ந்து தீர்மானம்

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து அளித்தனர்
Published on

புதுடெல்லி: ​திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​று​ம் விவ​காரத்​தில், சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி​நாதனை பதவி நீக்​கம் செய்​யக் கோரி மக்​களவைத் தலைவர் ஓம் பிர்​லா​விடம், இண்​டியா கூட்​ட​ணியை சேர்ந்த 120 எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

தமிழகத்தின் மதுரை திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் கார்த்​திகை தீபத் தினத்​தில் தீபம் ஏற்ற உத்​தர​விடக் கோரி இந்து அமைப்​பினர் வழக்கு தொடர்ந்​தனர். இந்த வழக்​கில் சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் தீபம் ஏற்​று​மாறு கோயில் நிர்​வாகத்​துக்கு உத்​தர​விட்​டார். ஆனால், மலை​யில் வழக்​க​ம் போல் உச்சி பிள்​ளை​யார் கோயில் அருகே மட்​டும் தீபம் ஏற்​றப்​பட்​டது. மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகமும், போலீஸாரும் அனுமதிக்கவில்லை.

இதையடுத்​து, இந்து அமைப்​பினர் நீதிமன்ற அவம​திப்பு வழக்கு தொடர்ந்தனர். அதை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், உயர் நீதி​மன்ற பாது​காப்​பில் இருந்த சிஐஎஸ்​எப் வீரர்​கள் பாது​காப்​புடன், மனு​தா​ரரை தீபம் ஏற்ற மீண்​டும் உத்​தரவு பிறப்​பித்​தார். இதனிடையே, திருப்​பரங்​குன்​றம் பகு​தி​யில் சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும் என தெரி​வித்த போலீ​ஸார், தீபம் ஏற்ற அனு​மதி கொடுக்க முடி​யாது என்று மீண்டும் தடுத்தனர். மேலும், அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றம் மற்​றும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணை​யில் இருக்​கும் நிலை​யில், சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினையை ஏற்​படுத்​தும் வகை​யில் நீதிபதி சுவாமிநாதன் சர்ச்​சைக்​குரிய தீர்ப்பை வழங்​கிய​தாக தமிழக அரசு குற்​றம் ​சாட்​டியது.

நாடாளுமன்றத்தில் நேற்று அலு​வல்​கள் தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்​லாவை அவரது அறை​யில் திமுக எம்​.பி.க்​கள் உள்ளிட்ட இண்​டியா கூட்​ட​ணி​யைச் சேர்ந்த எம்​.பி.க்​கள் சந்​தித்​தனர். அப்​போது நீதிபதி ஜி.ஆர். சுவாமி​நாதனை பதவி நீக்​கம் செய்​ய ​வேண்​டும் என்று இயற்​றப்​பட்ட தீர்​மான நோட்டீஸை அவரிடம் எம்​.பி.க்​கள் வழங்​கினர்.

அப்​போது திமுக எம்​.பி.க்​கள் கனி​மொழி, டி.ஆர்​.​பாலு, சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ், காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி உள்​ளிட்​டோர் இருந்​தனர். இந்த பதவி நீக்க தீர்​மானத்​தில் மொத்தம் 120 எம்.பி.க்கள் கையெழுத்​திட்​டுள்​ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முடிவெடுப்பார்.

விதிகள் தெரிவிப்பது என்ன? - நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 எம்.பி.க்களும் கையெழுத்திட்டு தீர்மானம் தர வேண்டும்.

பின்னர் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டால் 3 நபர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் என 3 பேர் இருப்பார்கள். இந்தக் குழு, ஆதாரங்களை ஆராய்ந்து விசாரிக்கும். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தையும் விசாரணைக் குழு கேட்கும்.

இதன்பின்னர் விரிவான அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் விசாரணை குழு சமர்ப்பிக்கும். நீதிபதி மீது தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதமும் அதன் பின்னர் வாக்கெடுப்பும் நடத்தப்படும்.

பதவிநீக்கம் செய்ய அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இல்லாவிட்டால் தீர்மானம் நிராகரிக்கப்படும். ஒருவேளை ஆதரவு கிடைத்துவிட்டால், அந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.

அதைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட நீதிபதியை, பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு போதுமான எம்.பி.க்கள் இல்லை. எனவே, இந்தத் தீர்மானம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதிபதி சுவாமிநாதனை நீக்கக் கோரி மனு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 120 பேர் சேர்ந்து தீர்மானம்
திருப்பரங்குன்றம் வழக்கு: தலைமை செயலாளர், ஏடிஜிபி டிச.17-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in