சென்னை: காதலிக்குமாறு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த பட்டதாரியான ஜவுளிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஜவுளிக்கடையில் பணியாற்றி வரும் பட்டதாரியான அஜுமுதீன் (27) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜுமுதீனின் நடவடிக்கைகள் சரியில்லாததால், பள்ளி ஆசிரியை அவரை விட்டு விலகியுள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார்.
இருப்பினும், அஜுமுதீன் தொடர்ந்து பள்ளி ஆசிரியையை பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி தண்டையார்பேட்டையில் உள்ள பிரபல டீக்கடை அருகே பள்ளி ஆசிரியை தனது தோழியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜுமுதீன், ஆசிரியையிடம் காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அவர் மறுத்ததால் தகாத வார்த்தைகளால் பேசி, கொலைமிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியை, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததால் அஜுமுதீனை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.