செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரின் ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்களைத் தயாரித்து சக ஆசிரியர்களுக்கு அனுப்பியதுடன், சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்த, அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மீது மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரியும் ஹென்றி ஜார்ஜ், மற்றொரு ஆசிரியர் ஃப்ரீடி ஆகிய இருவரும், ஆசிரியை ஒருவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாகச் சித்தரித்து, கடந்த 2 மாதங்களாக சக ஆசிரியர்களுக்கு செல் போனில் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த ஆசிரியை இருவரிடமும் கேட்டபோது, தாங்கள் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும், இல்லையெனில் ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று ஆசிரியர்கள் மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து, ஆசிரியை அளித்த புகாரின்பேரில் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸார், பாரதிய நியாயச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.