ஆனி பிலிப், மீரா பிலிப்

 
க்ரைம்

அமெரிக்காவில் இருந்து குமரி வந்து உயிரை மாய்த்துக் கொண்ட கேரள சகோதரிகளின் உருக்கமான மின்னஞ்சல்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குறிகாட்டில் கிடங்கூர் பகுதியை சேர்ந்தவர் பிலிப். இவரது மகள்கள் எலிசபெத் பிலிப், ஆனி பிலிப், மீரா பிலிப். இதில் மூத்த மகள் எலிசபெத் பிலிப் திருமணம் ஆகி லண்டனில் வசித்து வருகிறார்.

ஆனி பிலிப் (35) எக்ஸ்ரே டெக்னீசியனாகவும், அவரது தங்கையான மீரா பிலிப் (32) பொறியாளராகவும் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இருவரும் கேரளாவுக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ராமேசுவரம், மதுரை போன்ற இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, கடந்த 26-ம் தேதி மாலை கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்குள்ள தனியார் விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கினர்.

அங்கிருந்து வெளியே சென்றவர்கள், 3 நாட்களாக திரும்பி வரவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் கலக்கமடைந்தனர். செல்போன் எண்ணை வைத்து அவர்களின் தாயார் மேரி என்பவரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாயமான சகோதரிகளின் தந்தையான பிலிப்பின் அண்ணன் சிஷு என்பவரும், அவர்களது உறவினர்களும் கன்னியாகுமரிக்கு வந்து பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸாரும் தேடினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கன்னியாகுமரி வாவத்துறை கடல் தூண்டில் வளைவில் இருவரும் சடலமாக கிடந்தனர். அவர்களது உடலை மெரைன் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர். போலீஸார் நடத்திய விசாரணையில், சகோதரிகள் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அமெரிக்காவில் இருந்து புறப்படும்போது ஆனி பிலிப், மீரா பிலிப் ஆகியோர் தங்களது மூத்த சகோதரி எலிசபத் பிலிப்புக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அதில், ‘மன வருத்தத்துடன் ஊருக்கு புறப்படுகிறோம். இனி எங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம். எங்களுக்காக ஒன்று மட்டும் செய்யுங்கள்.

நாங்கள் இருவரும் இறந்த பின்னர் கன்னியாகுமரிக்கு வந்து எங்களுக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைத்து விடவேண்டும்.

இதை எங்களுக்காக செய்ய வேண்டும்’ என மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது தெரியவந்தது. தற்கொலை செய்துகொண்ட சகோதரிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT