சென்னை: கேரள மாநில காவல் துறையில் எஸ்ஐ-யாக பணியாற்றி வரும் ஒருவர் நேற்று அதிகாலை 1.20 மணியளவில் தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார்.
அப்போது பதற்றத்துடன் பேசிய அவர், தனது மகன் அனந்த கிருஷ்ணன் (25) சென்னையில் தங்கி, துரைப்பாக்கம் பகுதியில் தனியார் செயலி மூலம் வாடகை கார் ஓட்டி வருவதாக தெரிவித்தார்.
மேலும், தனது மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருப்பதாகவும், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் கண்ணீர் மல்க போலீஸாரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும்,அனந்த கிருஷ்ணன், கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தையும், அவரது தந்தை சென்னை போலீஸாருக்கு உடனடியாக அனுப்பி வைத்தார்.
கேரள போலீஸ் அதிகாரி அனுப்பிய புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அந்த புகைப்படம் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. உடனடியாக பட்டினப்பாக்கம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் கடற்கரை பகுதியில் தேடியபோது தனியாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை விசாரித்தனர். அவர் கேரள போலீஸ் அதிகாரியின் மகன் அனந்த கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரிடம் உரிய விசாரணை நடத்தி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது நண்பர் ஷாஜிமொலானாவிடம், அனந்த கிருஷ்ணன் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.
அதிகாலை 1.20 மணிக்கு கேரள போலீஸ் அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடங்கிய போலீஸார் சுமார் 3 மணியளவில் அனந்த கிருஷ்ணனை பத்திரமாக மீட்டனர்.