திருப்பதி: திருப்பதி நகரின் மையத்தில், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் (என்எஸ்யு) செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த மாத இறுதியில், முதலாம் ஆண்டு படித்து வரும் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை அறிந்த மற்றொரு உதவி பேராசிரியரும் வீடியோ இருப்பதாகக் கூறி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக திருப்பதி போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.
ஆனால் போலீஸார் அந்தப் புகாரை விசாரிக்கவில்லை. இந்நிலையில், நேற்று திருப்பதி எம்பி டாக்டர் குருமூர்த்தி மற்றும் தெலங்கானா மாநில வாரங்கல் எம்பி கடியம் காவ்யா ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டுமென நோட்டீஸ் வழங்கினர். இதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, நேற்று இருவரும் இது தொடர்பாக பேசினர்.
தலித் மாணவிக்கு திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று மாலை, திருப்பதி எஸ்பி சுப்புராயுலு உத்தரவின் பேரில், போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.