மதுரை: மதுரையில் பட்டதாரி இளைஞர் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வீடியோ வெளியிட்டவர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ ஓட்டிச் சென்ற ஒருவர் புறக்காவல் நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, திறந்து கிடந்த புறக்காவல் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.
கோஷம் எழுப்பினார்... பின்னர், ஏற்கெனவே தயாராக எடுத்துச் சென்ற கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவி, புறக்காவல் நிலையத்துக்கு உள்ளேயே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு பதறிப்போன வாகன ஓட்டிகளும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் அங்கு சென்று, புறக்காவல் நிலையத்தில் இருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றி, தீயை அணைத்த னர். எனினும், பலத்த தீக்காய மடைந்திருந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலில் தீ வைக்கும்போது கோஷம் எழுப்பியது தெரிய வந்துள்ளது.
இந்து அமைப்பு ஒன்றில்... இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் பூர்ணசந்திரன் (40) என்று தெரியவந்தது. எம்பிஏ பட்டதாரியான இவர், மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். மேலும், பகுதி நேரமாக பழங்கள் விற்றுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "உயிரிழந்தவர், இந்து அமைப்பு ஒன்றில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அண்மையில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே அவர் தீக்குளித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகிறோம். மேலும், அவரது செல்போனையும் ஆய்வு செய்கிறோம்" என்றனர்.
தற்கொலைக்கு முன் பேசிய ஆடியோ வைரல்: பூர்ணசந்திரன் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் பேசிய ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த ஆடியோவில் ‘‘திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படைவீடு. அங்கு தீபம் ஏற்றுவது மதுரை மக்களுக்குத்தான் பெருமை. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. அரசு ஏன் இதைத் தடுக்க நினைக்கிறது? முஸ்லிம்கள் யாரும் தீபம் ஏற்றுவதை தடுக்கவில்லை. என்னுடன் ஏராளமான முஸ்லிம் நண்பர்கள் படித்தனர்.
மதுரை மக்களிடையே கலவரத்தைத் தூண்ட நினைக்கின்றனர். மன்னித்து விடுங்கள், ஓர் இந்துவாக தீபம் ஏற்றாமல் இருப்பது மன வருத்தத்தை அளிக்கிறது. கடவுள் இல்லை என்று கூறும் பெரியார் சிலை முன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்.
2026-ம் ஆண்டிலாவது தீபம் ஏற்ற வேண்டும். எனக்கு இனியா, சிவனேஷ் என்ற குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று கூறியுள்ளார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.