திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறியதாக அரசு தரப்பு இறுதி வாதம்

உயர் நீதிமன்றத்தில் 5 நாள் விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறியதாக அரசு தரப்பு இறுதி வாதம்
Updated on
2 min read

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறி அவசர அவசரமாக விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என அரசுத் தரப்பின் இறுதி வாதத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த 26 மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த 5 நாட்களாக நடந்தது.

இன்றைய விசாரணையின்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதிடுகையில், “தெளிவான, உறுதியான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். கோயிலில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வழக்கத்தை மாற்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி செல்லுமா என்பதே வழக்கின் மையக்கேள்வியாக உள்ளது.

கோயில் கலாச்சாரம், ஆகம விதிகள், பூஜை விதிகள், அர்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமை சட்டம் ஆகிய அனைத்தும் முறையாகவும் சட்டப்பூர்வமாகவும் இருக்கும் நிலையில், அதனை மாற்றும் வகையில் தனி நீதிபதி உத்தரவிட்டது சரியல்ல. ஒரு தனி நபர் புதிதாகக் கூறும் கலாச்சாரத்தை ஏற்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

திருப்பரங்குன்றத்தில் கோயில், அறநிலையத் துறை, தேவஸ்தானம் மற்றும் அறங்காவலர் குழு ஆகியோரின் ஒருமித்த முடிவின்படி, உச்சிப்பிள்ளையார் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் வழக்கமாக ஏற்றப்பட்டு வருகிறது. அதற்குத் தகுந்த ஆதாரங்கள் கோயில் தரப்பிடம் உள்ளன. இதை மாற்றக் கோரும் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்தவித ஆவணங்களும், வரலாற்று ஆதாரங்களும் இல்லை. 1920-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி முழு மலையையும் ஆய்வு செய்தபோது, மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது தூண் இருந்திருந்தால், அது தீர்ப்பில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். தூண் தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லை. மலை உச்சியில் தர்கா உள்ள நிலையில், அந்தத் தூண் எப்போது அமைக்கப்பட்டது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

தீபம் ஏற்றுவது போன்ற கோயில் நடைமுறைகள் உரிமையியல் தன்மை கொண்டவை. இதுபோன்ற வழக்குகள் உரிமையியல் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி நேரடியாகத் தலையிட முடியாது. மதுரை பாண்டி கோயில் தொடர்பான வழக்கிலும், அர்ச்சகர் பூஜை செய்யும் உரிமை குறித்து உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவே தீர்ப்பளிக்கப்பட்டது.

எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அறநிலையத் துறைக்கே உள்ளது. ஒரு கோயிலில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்களை திடீர் உத்தரவால் மாற்ற முடியாது. தனி நீதிபதி தனது அதிகார எல்லையை மீறி அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றார்.

பின்னர் நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் வழக்கில் உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகள் என்ன? உயர் நீதிமன்ற தனி நீதிபதி இதுபோன்ற விவகாரங்களில் தலையிட முடியுமா என்பதற்கான சட்ட ஆதாரங்கள் மற்றும் அறநிலையத் துறை விதிகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து மனுதாரர் ராம. ரவிக்குமார் தரப்பில், “தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூற முடியாது. செயல் அலுவலர் மனுதாரரின் மனுவை இணை ஆணையருக்கு ஏன் அனுப்பவில்லை. மனுவை நிராகரிக்கச் செயல் அலுவலருக்கு அதிகாரம் இல்லை.

பூஜை, அர்ச்சனை, தரிசனம் ஆகியவை ஆகம விதிகளுக்கு உட்பட்டவை. கார்த்திகை தீபம் ஏற்றுவதில் எங்கும் ஆகம விதிகள் நடைமுறைப்படுத்தவில்லை. மதச்சார்பற்ற அரசு, ஒரு பக்க மதச் சார்புடன் நடந்து கொள்ளக் கூடாது. பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.

மற்றொரு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தர்கா தரப்பு மலை உச்சியில் உள்ள கோயில் தல விருட்சத்தை ஆக்கிரமித்து வருவதாகக் கூறி, அது தொடர்பான புகைப்படங்களைத் தாக்கல் செய்தார்.

அப்போது “தர்கா தரப்பில் மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்கக் கூடாது. இது உரிமையியல் சார்ந்த மனு” எனக் கூறப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஜன.7-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறியதாக அரசு தரப்பு இறுதி வாதம்
திருப்பூரில் அண்ணாமலை கைது - தடையை மீறி போராட முயன்றதால் நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in