க்ரைம்

கரூர் அருகே மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் தாய் உயிரிழப்பு, மகள் காயம்

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாய், மகளை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த தாய் உயிரிழந்தார். காயமடைந்த மகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பாப்பாம்மாள் (65). இவரது மகள் மஞ்சுளா (42). இவர்கள் இருவரும் நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்தப்போது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் பாப்பம்மாள் மற்றும் மஞ்சுளாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிசென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த தாய் பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மகள் மஞ்சுளா காயமடைந்தார்.

இதுகுறித்து தவலறிந்த நங்கவரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மகள் மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த தாய் பாப்பம்மாள் உடலை பிரேத பரிசோதனை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவலறிந்த கரூர் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கை ரேகை நிபுணர்கள் தடையங்களை சேகரித்தனர்.

வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட பாப்பம்மாளின் பேத்தி நேற்றிரவு பாட்டி பாப்பம்மாள் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அவரை தேடி போலீஸார் கோவை சென்றுள்ளனர்.

SCROLL FOR NEXT