க்ரைம்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பாலக்காடு எம்எல்ஏவை தேடி பொள்ளாச்சியில் தனிப்படை முகாம்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பாலக்காடு தொகுதி எம்எல்ஏவை தேடி கேரள தனிப்படை போலீஸார் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டுள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் ராகுல் மங்கூட்டத்தில்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மீது துணை நடிகை உள்பட இளம்பெண்கள் சிலர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ராகுல் மங்கூட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் இளம் பெண் ஒருவர், கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய கேரள போலீஸார், எம்எல்ஏ ராகுல் மங்கூட்டத்தில் மீது பாலியல் துன்புறுத்தல், கருக்கலைப்பு செய்ய தூண்டுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், போலீஸாரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் எம்எல்ஏ ராகுல் மங்கூட்டத்தில் தலைமறைவானார். அவரை கைது செய்ய 4 தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ள தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பகுதியில் அவர் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸார் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு அவரை நேற்று தேடி வந்தனர்.

ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தமிழக போலீஸார் கூறும்போது, “பாலக்காடு எம்எல்ஏவை தேடி கேரள போலீஸார் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இதுவரை தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் எவ்வித உதவியும் கேரள போலீஸார் கோரவில்லை” என்றனர்.

SCROLL FOR NEXT