காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சோமாஸ்கந்தர் சிலை செய்ததில், தங்கம் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்த 1,200 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததாகக் கூறி, 2015-ம் ஆண்டில் புதிய சிலைகள் செய்யப்பட்டன.
இதற்காகப் பக்தர்களிடம் இருந்து பல கிலோ தங்கம் மற்றும் பணம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் ஆகிய இரு சிலைகளிலும் தங்கம் சேர்க்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது.
சிலைகளில் தங்கம் இல்லை: இது தொடர்பாக, முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அவர்கள் நடத்திய சோதனையில், புதிய சிலைகளில் தங்கம் சிறிதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிவகாஞ்சி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், இந்த வழக்கு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, தற்போதைய கூடுதல் ஆணையர் கவிதா உள்பட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
அவர்களுக்கு வழக்கின் 300-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜன. 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிதாகச் செய்யப்பட்ட இரு சிலைகளிலும் மொத்தம் 8.7 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்பதும், அதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் அப்போது விசாரணை நடத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் குற்றச்சாட்டாக இருந்தது.
விசாரணை மீது அதிருப்தி: இதன் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணை மீது அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீஸார் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், இந்த வழக்கை சிவகாஞ்சி போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.