பவன் குமார்
தாம்பரம்: சோமங்கலம் அருகே புதுப்பேட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், துப்பாக்கியைக் காட்டி போலீஸாரிடம் இருந்து தப்பிய கும்பலைச் சேர்ந்த பவன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த சோமங்கலம் அருகே புதுப்பேட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாலை, காரில் வந்த கும்பல், ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து கண்காணிப்பு கேமராக்களில் ரசாயனத்தை தெளித்துள்ளனர்.
பின்னர் காஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தின் பணப்பெட்டியை உடைத்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.
ஏடிஎம் கொள்ளை குறித்து மும்பையில் உள்ள வங்கியின் மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸாருக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்தை அடைவதற்குள் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.
இதையடுத்து தனிப்படை போலீஸார் கொள்ளையர்களைத் தேடினர். அவர்கள் பயன்படுத்திய கருப்பு நிற காரின் பதிவு எண்ணை மாற்றியிருந்தது தெரியவந்தது. அந்த கார் தெலங்கானா சென்றதை கண்டறிந்த போலீஸார், சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பினர். பின்னர் வனப்பகுதியில்காரை விட்டுச் சென்றனர். கொள்ளையர்கள் ஹரியானாவுக்குத் தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை அங்கு விரைந்தது.
இந்நிலையில் பவன் குமார் ஜெய்ப்பூர் வைஷாலி நகர் போலீஸாரால் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், மேலும் 4 பேர் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை உட்பட 3 கொள்ளை சம்பவங்களில் கும்பல் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் வேலூர் உள்ளிட்ட 2 இடங்களில் கொள்ளைக்கு முயன்றதாகவும் பவன் குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானின் மேவாட் பகுதியைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த கும்பல் மீது தமிழகத்தில் சுமார் 55 வழக்குகள் இருப்பதாகவும், பல்வேறு மாநிலங்களிலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, சோமங்கலம் கொள்ளையில் முதலில் கன்டெய்னர் லாரியை பயன்படுத்திய கும்பல், பின்னர் அதை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தெலங்கானா பதிவு எண் கொண்ட காரில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி ஏடிஎம் கொள்ளையில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கன்டெய்னர் லாரி, பெரும்புதூர் அருகே வடகால் பகுதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பவன் குமாரை சோமங்கலம் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க பிடிவாரன்ட் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.