

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு, ஆம்னி பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் உள்ளிட்டவை பயணித்து வருகின்றன.
இச்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழகத்தில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் சுங்கச் சாவடிகளில், கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி, பாளையம், கோட்டகவுண்டம்பட்டி, ராசம்பாளையம், விக்கிரவாண்டி, மேட்டுப்பட்டி, நாதன்கரை, வீரசோழபுரம், பொன்னம்பாலப்பட்டி, திருப்பராய்த்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை, சமயபுரம், வேலஞ்செட்டியூர், கொழிஞ்சிபட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் நேற்று முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், வாகனங்களுக்கு ஏற்றார்போல், ரூ.5 முதல் 20 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறுகையில்,“தமிழகத்தில் மொத்தமுள்ள சுங்கச்சாவடிகளில், 30 சுங்கச்சாவடிகள் காலாவதியானது. இருப்பினும், சாலை மேம்பாட்டு மற்றும் விரிவாக்க பணியை காரணம் காட்டி, சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. ஆனால், போதிய சாலை பராமரிப்பு பணிகள் இல்லாததால், விபத்துகளும் அதிகமாக நடக்கின்றன. எனவே, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்” என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், ஒப்பந்தக் காலம் முடிவடைந்த அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.