ஜெரால்ட் டேவிட்

 
க்ரைம்

பொது இடத்தில் கஞ்சா புகைத்ததால் விபரீதம்: போலீஸாரை கண்டு அச்சத்தில் ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கஞ்சா புகைத்தபோது போலீஸாரை கண்டு ஏரியில் குதித்து தப்ப முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சென்னை ராஜமங்கலம் பகுதியில் உள்ள சிவசக்தி நகர் 10-வது தெருவில் நேற்று முன்தினம் மாலை 4 இளைஞர்கள் குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்து மது அருந்தியும், கஞ்சா புகைத்தும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராஜமங்கலம் காவல் நிலைய ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீஸார் வருவதைக் கண்டதும், 4 இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ஒருவர் அருகில் உள்ள ரெட்டை ஏரிக்குள் (ரெட்டேரி) இறங்கி தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஏரியில் மூழ்கினார்.

நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த போலீஸார் உடனடியாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். இருப்பினும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், கொளத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்களும் ஏரியில் தேடினர்.

போலீஸார் விசாரணை

நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, ஏரியில் மூழ்கிய இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தைச் சேர்ந்த ஜெரால்ட் டேவிட் (20) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஜெரால்ட் டேவிட் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொது இடத்தில் மது அருந்துவதையும், கஞ்சா புகைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்ததாக போலீஸார் கூறினர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT