க்ரைம்

சென்னை | லஞ்சம், மோசடி புகாரில் மாநகராட்சி பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சியில் லஞ்சம் மற்றும் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது தொடர்பாக, 6 பணியாளர்களை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.

தவெக ஆட்சி அமைந்த பிறகு, சென்னை மாநகராட்சி முதல்வரின் துறைகளின் கீழ் வரும் நிலையில், மாநகராட்சியில், திமுக ஆட்சியில் அதிக தொகையுடன் கோரப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

விதிமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீதும் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, லஞ்சம் கேட்பது, வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடுவது உள்ளிட்ட புகார்களுக்கு உள்ளான 6 பணியாளர்களை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மண்டல சுகாதார அதிகாரியாக இருந்த மருத்துவர் தேவிகலா, ரூ.9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக போலி பில்களை சமர்ப்பித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மூத்த பூச்சியியல் வல்லுநர் சிவ பொற்கொடி, மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ஒரு இளைஞரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதேபோல், உதவி செயற்பொறி யாளர் ஆனந்தராவ், கட்டிட உரிமையாளர் ஒருவரிடம் ரூ.2.5 லட்சம் லஞ்சம் கேட்டதற்காகவும், சாலை பணியாளர் பாஸ்கர், உரிய அனுமதி பெற்றிருந்த கட்டிட உரிமையாளரை மிரட்டி ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதற்காகவும், பில் கிளர்க்குகள் துர்கா மற்றும் கண்ணன் ஆகியோர் ராயபுரம் மண்டலத்தில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கோரியதற்காகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் இவர்களில், 4 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும், மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT