ஆவடி: எண்ணூர் அடுத்த எர்ணாவூர் பகுதியில் போலி வங்கிக் காசோலைகள், ஆவணங்கள், கல்விச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆவடி காவல் ஆணையரகத்துக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் நேற்று எண்ணூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, விம்கோ நகர், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஜெயக்குமார் என்கிற ஸ்டீபன் (38) என்பவரை பிடித்து போலீஸார் சோதனை செய்தனர்.
அச்சோதனையில், போலியான வங்கிக் காசோலைகள், தனியார் மற்றும் அரசு அலுவலக ரப்பர் ஸ்டாம்புகள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அதனை அச்சடிக்கும் பேப்பர்களை ஜெயக்குமார் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஜெயக்குமாரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், ஜெயக்குமார், எர்ணாவூரில் போலிப் பத்திரங்கள் மற்றும் ரப்பர் ஸ்டாம்புகளை வைத்து வங்கி காசோலைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் போலியான சான்றிதழ்களை தயார் செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எண்ணூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, ஜெயக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான கருணாகரன், சத்தியமூர்த்தி, கருணாநிதி, விக்டர், ஜான்சன் ஆகிய 6 பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து போலி சான்றிதழ்கள், லேப் டாப், பிரின்டர், ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.