கோப்புப் படம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட, ரூ.12.49 லட்சம் வெள்ளி பொருட்கள் சிக்கின.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் மதுசூதன ரெட்டி தலைமையிலான போலீஸார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நாகர்கோவிலில் இருந்து சென்ட்ரலுக்கு விரைவு ரயில் நேற்று வந்தது. அதிலிருந்து இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரைப் பிடித்து, அவரது பைகளை சோதித்தபோது, அதில் வெள்ளிக கட்டி மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 4 கிலோ 527 கிராம். இதன் மதிப்பு ரூ.12.49 லட்சம் ஆகும். இந்த வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, அவர் வேலூரைச் சேர்ந்த நாகப்பன் மோகன் (39) என்பதும், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்ததும், அவரிடம் வெள்ளி பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரையும், வெள்ளி பொருட்களையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.