திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடை பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த கவிஞர் வைரமுத்துவுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண், திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
அதேவேளையில் வரவேற்பு நிகழ்வை முடித்துவிட்டு, கவிஞர் வைரமுத்து வாகனத்துக்கு செல்ல முயன்றார். அப்போது, தர்ணாவில் ஈடுபட்ட பெண், திடீரென வழக்கறிஞர்களை நோக்கி காலணிகளை வீசினார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அந்த பெண்ணை பிடித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரது பெயர் ஜெயா என்பதும், மனநலம் பாதித்தவர் என்பதும் விசாரணையில் உறுதியானது.
அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அந்த பெண்ணை திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.