தூத்துக்குடி: பெண் காவலருக்கு தவறான மெசேஜ் அனுப்பியதாக கூறப்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் திலீபன். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இன்னும் அங்கு சென்று பணியில் சேரவில்லை.
இந்நிலையில், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி தற்போது, சிங்கப்பெண் பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆய்வாளர் திலீபன் தவறான மெசேஜ் அனுப்பியதாகவும், இதனை தட்டிக்கேட்ட அந்த பெண் காவலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தன் மீதான புகாரை மறுத்து ஆய்வாளர் திலீபன் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து, ஆய்வாளர் திலீபனை தற்காலிக பணிநீக்கம் செய்து, திருநெல்வேலி சரக டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.