சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 29 வயது பெண், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக 2022-ம் ஆண்டில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த சின்னத்திரை நடிகர் சரவணன் என்பவருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியதை தொடர்ந்து, இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சரவணனுக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதும், அவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரிந்திருந்த நிலையிலும், திருமணம் செய்வதாக கூறியதால் அவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
இதற்கிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய சரவணன் மறுத்துள்ளார். கொலை மிரட்டலும் விடுத்தாராம். மேலும், பல்வேறு தவணைகளில் ரூ.40 லட்சம் வரை பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.