கொல்கத்தா: மேற்குவங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ராத்தை (42) மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
மேற்குவங்க தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவை, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரியின் வெற்றிக்காக அவரது நேர்முக உதவியாளர் சந்திரநாத் ராத் அதிதீவிரமாக பாடுபட்டார். அப்போது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.
இந்த சூழலில் சந்திரநாத் ராத் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தலைநகர் கொல்கத்தாவில் இருந்து தனது சொந்த ஊரான மத்தியம்கிராம் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஓட்டுநர் காரை ஓட்ட, முன் இருக்கையில் சந்திரநாத் ராத் அமர்ந்திருந்தார். இரவு 10.30 மணிக்கு மத்தியம்கிராம் நகரின் பிரதான சந்திப்பில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் திடீரென குறுக்காக பாய்ந்து வழிமறித்தது. அதேநேரம் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம மபர்கள் கைத்துப்பாக்கிகளால் 10 குண்டுகளை சுட்டனர். இதில் 4 குண்டுகள் சந்திரநாத் ராத்தின் தலை, மார்பை துளைத்தது.
கார் ஓட்டுநர் புத்ததேவ் பெரா மீதும் சில குண்டுகள் பாய்ந்தன. இதன்பிறகு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். போலீஸார் விரைந்து வந்து சந்திரநாத் ராத், அவரது ஓட்டுநர் புத்ததேவ் பெராவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சந்திரநாத் ராத் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓட்டுநர் புத்ததேவ் பெராவின் உடலில் பாய்ந்த குண்டுகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அவரது உடல்நலம் தேறி வருகிறது.
மேற்குவங்க போலீஸார் கூறியதாவது: கொலைக்கு பயன்படுத்தப் பட்ட காரின் பதிவெண் போலியானது. மேலும் அவர்கள், கிளாக் 47X ரக கைத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த துப்பாக்கியை நன்கு பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே கையாள முடியும். மிக அருகில் இருந்து சந்திரநாத் ராத்தை சுட்டுள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்திருக்கிறோம். அதன் இன்ஜின் எண், சேசிங் எண்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
சந்திரநாத் ராத் யார்?
சந்திரநாத் ராத் இந்திய விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். விருப்ப ஓய்வு பெற்ற அவர், சில ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் சுவேந்து அதிகாரியுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.
மம்தா தோற்றதால் கொலை: சுவேந்து குற்றச்சாட்டு
பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி நேரில் சென்று சந்திரநாத் ராத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தாவை தோற்கடித்தேன். அதற்கு பழிவாங்கும் வகையில் எனது நேரடி
உதவியாளரை கொலை செய்துள்ளனர். இது திட்டமிட்ட கொலை ஆகும். கடந்த 3 நாட்களாக சந்திரநாத் ராத்தை வேவு பார்த்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் காட்டாட்சி நடைபெற்று வந்தது. திரிணமூல் காங்கிரஸின் காட்டாட்சிக்கு மக்களே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பாஜக அரசு பதவியேற்ற பிறகு சமூகவிரோத கும்பல்கள் வேரோடு அழிக்கப்படும். இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.