கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் கருப்பூரைச் சேர்ந்தவர் ராஜா மனோகர்(55). இவர் கூகூரில் உள்ள அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சிறப்பு வகுப்பு நடைபெற்றபோது, 7 மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜா மனோகர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக மாணவி ஒருவர் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விடுப்பில் இருந்த பள்ளித் தலைமை ஆசிரியர் கடந்த 23-ம் தேதி பள்ளிக்கு வந்தபோது, நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சத்யா புகார் அளித்தார். அதன்பேரில், ஆசிரியர் ராஜா மனோகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.