தாம்பரம்: பட்டா அளவீடு மற்றும் பெயர் திருத்தம் செய்வதற்காக மனுதாரரிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்றதாக சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் பிரசாந்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தாம்பரம் அருகே செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவர், தனக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து, அதில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்த தனது தந்தையின் பெயரைத் திருத்தி பட்டா வழங்கக்கோரி தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்து மேல் நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்வதற்காக சிட்லப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் பிரசாந்த் ரூ.5,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் ரூ.4,000 கொடுத்தால் போதும் என அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் நேற்று மதியம் 12 மணியளவில் பணத்தை வழங்குமாறு மனோஜ் குமாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து மனோஜ் குமார், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, அவர் கிழக்குத் தாம்பரம் ஆதிநகரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ரசாயன பவுடர் தடவிய பணத்தை பிரசாந்திடம் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், பணத்தைப் பெற்ற பிரசாந்தை கையும் களவுமாகப் பிடித்தது கைது செய்து,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரும் அறிக்கையை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.