செல்வகுமார், கனகராஜ்
வண்டலூர்: வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையத்தின் ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி செல்வ குமார் (33), கிளாம்பாக்கம் காவல் நிலைய ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி கனகராஜ் (33) ஆகியோர், கூட்டாளியுடன் படப்பை அருகே கரசங்கல் துண்டல் கழனி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் அதிகாலை அங்கு சென்று சுற்றிவளைத்தனர். அப்போது ரவுடிகள் அரிவாளுடன் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதில், தலைமைக் காவலர் ஆனந்தன் (45) காயமடைந்தார். தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சதீஸ்குமார் துப்பாக்கியால் சுட்டதில், செல்வகுமாரின் வலது காலில் குண்டு பாய்ந்தது.
காயமடைந்த செல்வகுமாரை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த கனகராஜை போலீஸார் கைது செய்து அங்கிருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய அகஸ்டின் என்பவர் தப்பியோடிய நிலையில், அவரை தேடி வருகின்றனர். கஞ்சா வழக்கு, ஆயுதங்களுடன் பதுங்கியது, போலீஸாரை தாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.