உள்படம்: ஆதிகேசவன்
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்ற ஆதிகேசவன் (20). இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், அடிதடி உட்பட 9 வழக்குகள் உள்ளன.
சென்னை காவல் துறையின் ‘பி’ வகை ரவுடியான ஆதி, ராஜமங்கலம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார். ஆதிக்கும், ஆவடி ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்துள்ளது.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. உடல் நலக்குறைவால் அக்குழந்தை நேற்று முன்தினம் இறந்தது.
தகவலறிந்த ஆதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அன்றிரவு வந்து, துக்கம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்த தனது தோழி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சாருமதியுடன் (23) சேர்ந்து, மது அருந்தியதுடன், அங்கேயே படுத்து உறங்கினார்.
பிரசவ வார்டின் எதிர்புறம் உள்ள தாழ்வாரப் பகுதியில் படுத்திருந்தநிலையில், நேற்று அதிகாலை 3.45 மணியளவில் அங்கு 2 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்த 3 பேர் வந்தனர். அவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தூங்கிக் கொண்டிருந்த ஆதியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
மருத்துவமனை ஊழியர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதியை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். கொலையாளிகளை கைது செய்ய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்தனர்.
கொலை தொடர்பாக சூர்யா, அலிபாய், கார்த்திக் மற்றும் ஆதியின் காதலி, தோழி சாருமதி ஆகியோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆதியின் காதலியின் காதலன்தான் சூர்யா எனவும் மற்ற இருவரும் சூர்யாவின் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது.
தகாத உறவு விவகாரத்தில் ஆதிக்கும், சூர்யாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால். கொலை நடந்ததா? அல்லது 2022-ல் நடைபெற்ற கொலைக்கு பழி தீர்க்கப்பட்டாரா? என்பன உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
கச்சிதமான திட்டம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 21 காவலாளிகள் உள்ளனர். இதில் சம்பவம் நடைபெற்ற பிரசவ வார்டில் மட்டும் 4 காவலாளிகள் பணியில் இருந்தனர். மருத்துவமனைக்கு அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருக்கும் என்பதால் அவை விரைந்து செல்ல தேவையான பணிகளில் காவலாளிகள் முக்கியத்துவம் கொடுத்தனர்.
நோயாளிகளுடன் அவர்களது உறவினர்கள் ஏராளமானவர்கள் வருவார்கள். அவர்கள் உணவு, உடை உட்பட பல்வேறு வகையான பொருட்களையும் பைகளில் சுமந்து வருவார்கள். இதனால் அதற்குள் என்ன இருக்கும் என யாருக்கும் தெரியாது.
அதை சோதனையிடுவதும் எளிதானது கிடையாது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கொலையாளிகள் சர்வ சாதாரணமாக பைகளில் ஆயுதங்களை உள்ளே எடுத்துச் சென்று, அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கொலை செய்துவிட்டு தயாராக வெளியே நிறுத்தியிருந்த வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.
போலீஸார் மீது நடவடிக்கை: கொலை நடந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்த பின்னர் கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரவுடி ஆதி கொலை தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 2022-ல் நடந்த கொலை வழக்கு தொடர்பாக 2 ஆண்டுகள் சிறையிலிருந்து 10 நாட்களுக்கு முன்புதான் ஆதி வெளியே வந்துள்ளார்.
ஆதி மீது கொலை வழக்குகள் இருப்பதால் பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சம்பவத்தன்று 10 போலீஸார் பணியில் இருந்துள்ளனர்.
அவர்கள் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.