போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பூவரசன்.
வேலூர்: குடியாத்தம் அருகே முன்விரோத தகராறில் பாமக பிரமுகரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுப் கொலை செய்த ரவுடி, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (46). பாமகவில் வேலூர் மேற்கு மாவட்ட அன்புமணி தம்பிகள் படையின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். இவர் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி பூவரசன் (29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நாட்டு துப்பாக்கியால் பூவரசன் சுட்டதில் ஞானவேல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடன் இருந்த ரகு (40) படுகாயம் அடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் குடியாத்தம் கிராமிய காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று நாட்டுத் துப்பாக்கியுடன் பூவரசனை கைது செய்தனர்.
இந்நிலையில், சேங்குன்றம் கிராமத்தில் உள்ள மலையடிவார பகுதியில் நாட்டு துப்பாக்கிக்கான மருந்து உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்வதற்காக பூவரசனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை அழைத்துச் சென்றனர். அங்கு, மறைத்து வைத்திருந்த கத்தியால், எஸ்ஐ ராஜாவை வெட்டிவிட்டு தப்ப முயன்ற பூவரசனை கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வன் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
இதற்கிடையில், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்ஐ ராஜாவை, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பூவரசன் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கிக்கான மருந்துகளை பதுக்கிவைத்த இடத்தை காணச் சென்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் பூவரசன் திடீரென தாக்கியதில் எஸ்ஐ ராஜாவுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. காவலர் இம்தியாஸ் லேசான காயமடைந்தார். தப்பி ஓட முயன்ற பூவரசனை ஆய்வாளர் தற்காப்புக்காக முதலில் வானத்தை நோக்கியும், இரண்டாவதாக காலில் சுட்டுப் பிடித்தார்” என்றார்.