சென்னை: புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெரு, குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று காலை இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்து இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர் புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த நரேஷ்குமார் (24) என்பதும், பிரபல ரவுடி குள்ள கார்த்திக்கின் கூட்டாளி என்பதும் தெரிய வந்தது.
இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. நரேஷ் குமாரின் முன்பக்க நெற்றியில் பலத்த காயமும், வலது பக்க மணிக்கட்டில் வீக்கமும் இருந்தது.
இதனால், இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.