டேவிட் உதயகுமார்
சேலம்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம கும்பல் படுகொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஜங்ஷன் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் டேவிட் உதயகுமார் (45). இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று காலை ஜங்ஷனில் இருந்து புதுரோடு மேம்பாலத்தில் டேவிட் உதயகுமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடியபோதும் அந்த கும்பல் விரட்டிச் சென்று வெட்டியது. இதில் படுகாயமடைந்த டேவிட் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டேவிட் உதயகுமார் மீது நில மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற டேவிட் உதயகுமார், மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். நேற்று கையெழுத்திட வந்தபோதுதான் அவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஆய்வு செய்த போலீஸார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.