சென்னை: கொடுங்கையூர் அருகே காதலியுடன் பேசிக்கொண்டிருந்த ரவுடியை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த ரவுடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி பங்காரு என்கிற அருண் (21). சி கேட்டகிரி ரவுடியும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான அருண் மீது கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உட்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரவுடி அருண் கொடுங்கையூர் எழில் நகர் 9-வது தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தாயுடன் குடியேறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் ரவுடி அருண் தனது காதலி தர்ஷினி உடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் புகுந்து அருணை காதலி கண்முன்னே வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதில் ரவுடி அருண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலி தர்ஷினி கதறி அழுததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அருணை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கொலையான ரவுடி அருண் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி அருண் கொலைக்கான காரணம் என்ன, அவரை கொலை செய்தவர்கள் யார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.