கைது செய்யப்பட்ட தனசேகர், இளந்தமிழன், மனோ, சரத்குமார், கதிரேசன், புவனேஸ்வரன்.
சென்னை/ஆவடி: கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி எண்ணூர் தனசேகரை, அவரது 5 கூட்டாளிகளுடன் போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
அவர்களிடம் துப்பாக்கி, தோட்டாக்கள், பட்டாக் கத்திகள், சொகுசு கார் மற்றும் ரூ.2.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்ற எண்ணூர் தனசேகர்.
எண்ணூர் காவல் நிலையத்தின் ‘ஏ-பிளஸ்’ சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர் மீது 9 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள், 5 வழிப்பறி வழக்குகள், ஆள்கடத்தல், தனியார் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை உள்ளிட்ட மொத்தம் 80 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், எண்ணூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில், பொன்னேரி 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், இணை காவல் ஆணையர் சிவக்குமார், துணை காவல் ஆணையர் மகேஸ்வரி ஆகியோரின் மேற்பார்வையில், எண்ணூர் உதவி காவல் ஆணையர் வெங்கட்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில், தனசேகர் தனது கூட்டாளிகளான மனோ என்கிற மணவாளன், இளந்தமிழன், சரத்குமார், கதிரேசன், புவனேஷ்வரன் ஆகியோருடன் சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று அதிகாலை தனிப்படை போலீஸார் ஓட்டலை சுற்றிவளைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தனசேகர் உள்ளிட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், உரிமம் இல்லாத ஒரு கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள், 5 பட்டாக்கத்திகள், 5 செல்போன்கள், ஒரு விலை உயர்ந்த சொகுசு கார், ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டம் மற்றும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட ரவுடி தனசேகர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வேறு குற்றச் செயல்களில் தொடர்பு உள்ளதா? அவர்கள் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.