சென்னை: விநாயகர் சதுர்த்தி அன்னதானத்தில் ஏற்பட்ட தகராறில், சினிமா ஊழியருக்கு கத்தி குத்து விழுந்தது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராமாபுரம் திருமலை நகர், நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் (40). சினிமாத் துறையில் வேலை செய்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி மாலை, கார்த்திக்கின் வீட்டின் அருகே உள்ள வரசக்தி விநாயகர் கோயில் முன்பு அன்னதானம் நடைபெற்றது. இதில், அவர் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
போதையில் தகராறு: அப்போது ஆட்டோவில் வந்த திருவள்ளூர் மாவட்டம், ஐயப்பன்தாங்கல், பெரிய கொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்த ராஜா என்ற தங்கராசா உட்பட 3 பேர், கார்த்திக்குடன் உணவு பரிமாறிக் கொண்டிருந்த தினேஷ் என்பவரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.
இதனைப் பார்த்த கார்த்திக், ராஜாவை சமாதானப்படுத்த முயன்றார். இதில் ஆத்திரமடைந்த ராஜா, அவரது நண்பர்கள் 2 பேர், சமாதானப்படுத்த முயன்ற கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் பேசினர்.தொடர்ந்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கினர்.
கொலை மிரட்டல்: இதனை தடுக்க வந்த நித்திஷ் என்பவரையும் தாக்கினர். பின்னர் ராஜா உட்பட 3 பேரும் கார்த்திக்குக்கு கொலை மிரட்டல் விடுத்து, ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இந்த விவகாரம் குறித்து ராமாபுரம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜா ராமாபுரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.
இவர் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 14 குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.