செங்குன்றம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி சிறை வாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, புதூர் அப்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தவர்களுக்கு படிப்படியாக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே கடந்த 2-ம் தேதி புழல் மத்திய சிறையில் ஜாமீன் கிடைப்பதில் ஏற்பட்ட தகராறில், விசாரணை பிரிவில் இருந்த பொன்னை பாலு, மணிகண்டன் ஆகியோருக்கும் புதூர் அப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இதை தடுக்க சென்ற உதவி ஜெயிலர் திருநாவுக்கரசு கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, ஜெயிலர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் புழல் போலீஸார் கொலை முயற்சி, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சிறைக்குள் மோதல்: இந்நிலையில், சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதூர் அப்புவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆகவே, நேற்றுமுன்தினம் மாலை புழல் மத்திய சிறையில் இருந்து புதூர் அப்பு விடுவிக்கப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது, சிறை நுழைவாயிலில், சிறைக்குள் நடைபெற்ற மோதல் சம்பவ தொடர்பாக பதிவு செய்யட்ட வழக்கில் ரவுடி புதூர் அப்புவை புழல் போலீஸார் கைது செய்தனர். பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.