சுரேஷ் குமார், பிரசாத்
சென்னை: குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் இருவர், தங்களை போலீஸாரிடம் காட்டிக்கொடுத்த இளைஞரை ஆட்டோவில் கடத்திச் சென்று பணம் பறித்தபோது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சென்னை, ஆர்.ஏ.புரம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அஜித்(24). டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 7-ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள சத்யா நகரில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஆட்டோவில் வந்திறங்கிய 2 பேர், அஜித்தை சரமாரியாக தாக்கினர். பின்னர், அவரை ஆட்டோவில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி தாக்கினர். அவரது செல்போனைப் பறித்து, பாஸ்வேர்டை மிரட்டி கேட்டு ஜி-பே மூலம் ரூ.4 ஆயிரத்தை, அவர்களது வங்கி கணக்குக்கு மாற்றினர்.
தொடர்ந்து, சைதாப்பேட்டையில் ஆட்டோவுக்கு கேஸ் நிரப்பினர். அதற்கும் அஜித்தின் ஜி-பே மூலம் ரூ.600 செலுத்தினர். அங்கிருந்து அடையார் திரு.வி.க. பாலம் அருகே இறக்கிவிட்டு மீண்டும் ரூ.10 ஆயிரம் கேட்டு தாக்கினர்.
அப்போது அஜித் கதறி கூச்சலிட்டார். இதைக்கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்திய இருவரையும் சூழ்ந்து கொண்டனர். தப்பிக்க முயன்ற இருவருக்கும் தர்மஅடி கொடுத்து, அபிராமபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அஜித்தை தாக்கி பணம் பறித்தது ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த பாபா சுரேஷ் என்ற சுரேஷ் குமார் (27), அவரது கூட்டாளியான அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (20) என்பது தெரியவந்தது.
இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், சுரேஷ்குமார் மீது 10 குற்ற வழக்குகளும், பிரசாத் மீது 3 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. சில வருடங்களுக்கு முன் இருவரும் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸாரிடம் அஜித் காட்டிக் கொடுத்ததால்தான் இருவரும் சிறை சென்றதாகவும், அந்த வழக்கு செலவுக்கான பணத்தை அஜித்திடம் பெறவே கடத்தி தாக்கியதாகவும் இருவரும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.