சென்னை: திருவொற்றியூர் துணிக்கடையில் கண்காணிப்பு கேமராக்களை அணைத்துவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி துணிகளைக் கொள்ளையடித்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் பாரதி நகர், டி.எச். சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வசந்தராஜ் (31). இவர் திருவொற்றியூர் இரட்டைமலை சீனிவாசன் முதல் தெருவில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 17-ம் தேதி மதியம் வசந்தராஜ் கடையில் இருந்தபோது, அங்கு வந்த 4 பேர் துணி வாங்குவது போல் நடித்துள்ளனர். பின்னர், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அணைத்துவிட்டு, துணிகளை எடுத்துள்ளனர்.
இதைத் தடுக்க முயன்ற வசந்தராஜை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், கடைக்கு வெளியே 2 இருசக்கர வாகனங்களுடன் தயாராக நின்றிருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கத்திமுனையில் துணிகளை அள்ளிச் சென்றது தண்டையார்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் (23), எண்ணூர் எஸ்விஎம் நகரைச் சேர்ந்த ரமேஷ்குமார் (29), அதே பகுதி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சஞ்சய்குமார் (23), விஜய் (25), யோகேஷ் (20) என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள்
போலீஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜெயகுமார், ரமேஷ்குமார் ஆகிய இருவரும் எண்ணூர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.