க்ரைம்

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் என ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.3.40 கோடி மோசடி

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்​லைன் முதலீட்​டில் அதிக லாபம் கிடைக்​கும் என்று கூறி, சென்​னையைச் சேர்ந்த 69 வயது ஓய்​வு​பெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.3.40 கோடி மோசடி செய்த வழக்​கில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு​வரை சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

சென்​னையைச் சேர்ந்த 69 வயது ஓய்​வு​பெற்ற வங்கி ஊழியரை, கடந்த 2025-ம் ஆண்டு வாட்​ஸ்​-அப் மூலம் தொடர்​பு ​கொண்ட மர்மநபர், தான் ராஜீவ் மேத்தா என்ற தலைமை முதலீட்டு அதிகாரி என அறி​முகப்​படுத்​திக் கொண்​டார். மேலும், பெங்களூரு​வில் செயல்​படும் தங்​களது முதலீட்டு நிறு​வனத்​தில் பணத்தை முதலீடு செய்​தால் அதிக லாபம் கிடைக்​கும் என்று கூறி அவரை நம்ப வைத்​துள்​ளார்.

இதற்​கிடையே, ‘FYERSHNIVIP’ என்ற பெயரில் செயல்​பட்ட வாட்​ஸ்​-அப் குழு​வில் சுமார் 50 பேர் உறுப்​பினர்​களாக இருப்​பது போன்றும், அவர்​கள் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்​டி​யிருப்​பது போன்​றும் போலி​யான உரை​யாடல்​கள் பகிரப்​பட்​டன. இதை உண்மை என நம்​பிய ஓய்​வு​பெற்ற வங்கி ஊழியர், நிறுவனம் வழங்​கிய பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த நபர்களின் வங்​கிக் கணக்​கு​களுக்கு 13 தவணை​களாக மொத்​தம் ரூ.3.40 கோடியை அனுப்பி​யுள்​ளார். பின்னர் இது மோசடி என்பதை உணர்ந்த அவர், சென்னை காவல் ஆணை​யர் அலுவலகத்​தில் புகார் அளித்​தார்.

இதன் அடிப்​படை​யில், மத்​திய குற்​றப்​பிரிவு போலீ ஸார், சைபர் குற்​றப்​பிரிவு காவல் அதி​காரி தலை​மை​யில் தனிப்​படை அமைக்கப்​பட்டு விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. இதில், ஆந்திராவில் இருந்து இந்த மோசடி அரங்​கேற்​றப்​பட்​டது தெரியவந்​தது. இதையடுத்​து, விசாகப்​பட்​டினம் சென்ற போலீஸார், அனகாப்​பள்ளி மண்​டலத்​தைச் சேர்ந்த கொனத்​தலா கிருஷ்ணா (52) என்​பவரை கைது செய்​து சுமார் ரூ.21 லட்​சத்தை மீட்டனர். மேலும் இதில் தொடர்​புடையவர்​களை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT