சென்னை: சென்னை கே.கே.நகர் காமராஜர் சாலையில் ரிசர்வ் வங்கி ஊழியர் குடியிருப்பில் மோகன்குமார் (30) என்பவர் வசித்து வந்தார். திருமணம் ஆகாத இவர், சென்னை பாரிமுனையில் செயல்பட்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கியில் மனிதவள உதவி அதிகாரியாக பணியாற்றினார். இணையத்தின் மூலம் முதலீடு செய்யும் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மோகன்குமார் ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.60 லட்சம் முதலீடு செய்தார். இதில் ரூ.30 லட்சம் வங்கிக் கடனாகவும், மேலும் ரூ.30 லட்சம் கடனாகவும் பெற்றுள்ளார் ஆனால், முதலீடு செய்த முழு தொகையையும் இழந்துள்ளார்.
இதனால், கடும் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்தார். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, போலீஸுக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து ராட்சத மின் விளக்கு உதவியுடன், ரப்பர் படகில் தேடினர். நேற்று காலை முதல் இரவு வரை தேடுதல் பணி நடைபெற்றது.
ஆனால், மோகன் குமாரை கண்டுபிடிக்க முடியில்லை. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் ஆன்லைன் டிரேடிங் முதலீட்டில் ஏற்பட்ட பெரும் நஷ்டம் இந்த விபரீத முடிவுக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.