மேடவாக்கம்: சென்னை வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தாம்பரம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி மேடவாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் சிவக்குமார் (26) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I-ல் இடம்பெற்றுள்ள பாதுகாக்கப்பட்ட உயிரினமான ஓர் அரிய வகை கிரிசில்ட் அணில் (Grizzled Giant Squirrel) இருப்பது கண்டறியப்பட்டது.
சிறையில் அடைப்பு
மேலும் உரிய பதிவுச் சான்றிதழ் இன்றி 1 சன்கானூர் பறவை, 6 ஆப்பிரிக்க லவ் பேர்ட்ஸ் பறவைகள், 2 பச்சை நிறம், ஒரு சிவப்பு நிறம் என மொத்தம் 3 இளம் வயது உடும்புகள் வளர்க்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த உயிரினங்களைக் கூண்டுகள், பிளாஸ்டிக் பெட்டிகளுடன் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சிவகுமாரை தாம்பரம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 2022-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், சிவக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.