விபத்துக்குள்ளான கார்கள்

 
க்ரைம்

ராமநாதபுரம் அருகே சாலை விபத்து: 4 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் 4 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திராவில் இருந்து 5 ஐயப்ப பக்தர்கள் ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் ராமேசுவரம் நோக்கி வந்துள்ளனர். நீண்ட பயணத்தால் சோர்வடைந்த அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கீழக்கரை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே  காரை நிறுத்திவிட்டு காரிலேயே தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது கார் ஒன்று ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நோக்கி 7 பேருடன் வந்தது. அந்தக் கார் நின்று கொண்டிருந்த ஆந்திராவை சேர்ந்த காரின் பின்புறம் மீது வேகமாக மோதியது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த காரில் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலும், கீழக்கரையிலிருந்து காரை ஓட்டிவந்த ஓட்டுநர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

மேலும் கீழக்கரையைச் சேர்ந்த 6 பேர் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் பலத்த காயங்களுடன்  ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீஸார் விபத்தில் உயிரிழந்த கீழக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முஷ்டாக் அகமது (30), ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ராமச்சந்திர ராவ் (55), அப்பாரோ நாயுடு(40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய ஐந்து பேரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT