திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தயாரிப்பு பொறியியல்(புரொடக் ஷன் இன்ஜினியரிங்) துறையில் பேராசிரியராக பணிபுரிபவர் ஜெரால்டு (51).
இவர் சக பேராசிரியை ஒருவரிடம் சகஜமாக பழகி வந்துள்ளார். பின்னர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருடனான நட்பை அந்தப் பேராசிரியை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெரால்டு, அந்தப் பேராசிரியைக்கு இ-மெயில் மூலம் ஆபாச செய்தியை அனுப்பியுள்ளார்.
இதை அந்தப் பேராசிரியை கவனிக்காமல் விட்டுவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியையின் கணவர் எதேச்சையாக மனைவியின் இ-மெயிலை திறந்து பார்த்தபோது ஆபாச செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தார். சைபர் க்ரைம் போலீஸில் பேராசிரியை புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் அம்பிகா வழக்குப் பதிவு செய்து பேராசிரியர் ஜெரால்டை நேற்று கைது செய்தார்.