கே.ராஜன்
சென்னை: பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85. சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் வழியாக நேற்று மாலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
மாலை 4.25 மணி அளவில், அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று அடையாறு பாலத்தில் நின்றது. வெள்ளை முழுக்கை சட்டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதியவர் ஒருவர் காரில் இருந்து இறங்கினார். திடீரென பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடையாறு ஆற்றில் குதித்தார்.
இதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றில் தத்தளித்தவரை மீட்க முயன்றனர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
மயிலாப்பூர், சைதாப்பேட்டையில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள், ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கிடையே, அடையாறு போலீஸாரும் விரைந்து வந்தனர். ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் (85) என்பது தெரியவந்தது.
போலீஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தனர். அடையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தயாரிப்பாளர் கே.ராஜனுக்கு மனைவி, 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கின்றனர்.
அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ராஜன் மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.
குடும்ப பிரச்சினையா?
நேற்று காரில் வேளச்சேரி சென்றுவிட்டு திரும்பும் வழியில் அடையாறு திரு.வி.க பாலம் வந்ததும் காரை நிறுத்துமாறு ஓட்டுநர் தனசேகரனிடம் கூறியுள்ளார். ‘மெதுவாக காரில் செல்லுங்கள். சிறிது தூரம் காலாற நடந்து வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் காரை நிறுத்தியதும், இறங்கிச் சென்று ஆற்றில் குதித்துள்ளார். தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சினையா, கடன் தொல்லையா என்று பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 1983-ல் சுரேஷ் நடித்து வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் கே.ராஜன். ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’ உட்பட சில திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
‘நம்ம ஊரு மாரியம்மா’, ‘உணர்ச்சிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், ‘மைக்கேல்ராஜ்’, ‘உளவுத்துறை’, உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது, திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்கள் இரங்கல்
கே.ராஜன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.