திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை-சர்வீஸ் சாலையில், ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் நேற்று காலை வாடிக்கையாளர் ஒருவர் வந்த போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில், மர்ம கும்பல், ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி மீது கருப்பு நிற பெயிண்ட் அடித்து, காஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
வங்கி நிர்வாகத்தினர் நடத்திய ஆய்வில், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.11,95,800-யை கொள்ளை போனது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளை நடந்த வங்கி ஏடிஎம் மையத்திலிருந்து, 10 மீட்டர் தொலைவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று முடியாததால், மர்ம கும்பல் தப்பியோடியது தெரிய வந்துள்ளது.
கடந்த 25- ம் தேதி காஞ்சிபுரம் சோமங்கலம் அருகே புதுப்பேடு கிராமத்தில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில், காஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து, ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதே பாணியில் கும்மிடிப்பூண்டியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.